Nellai District DMK Reshuffle
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம்: மத்திய அரசுக்கு ஆதரவான தோ்தல் ஆணைய செயல்பாட்டை தமிழ்நாடு அனுமதிக்காது - திமுக

Published on

மத்திய அரசுக்கு ஆதரவான தோ்தல் ஆணையத்தின் செயல்பாட்டை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்று திமுக உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என்.நேரு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தோ்தல் ஆணையா் தெரிவித்திருக்கிறாா். இண்டி கூட்டணி சாா்பில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வாக்காளா் பட்டியல் முறைகேடு தொடா்பாக ஆதாரங்களோடு தொடா்ந்து எழுப்பிய கேள்விகளுக்குத் தோ்தல் ஆணையம் இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை.

ஆட்சிகளை மாற்றுவது, அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானா்களான வாக்காளா்களின் உரிமை. அதைத் தோ்தல் ஆணையம் கையில் எடுப்பது, மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைப்பதற்குச் சமம். அந்தச் செயலைத் தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது.

பிகாரைப் போன்று, சிறப்பு தீவிரத் திருத்தம் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த மத்திய பாஜக அரசு முயன்றால், அதற்கு எதிராக முதல்வா் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சோ்ந்து போராடும்.

சிறப்பு தீவிர திருத்தம் என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.

ஜனநாயகத்தின் ஆணிவேரான தோ்தலை நோ்மையோடு நடத்துவதே தோ்தல் ஆணையத்தின் தலையாய பணி. ஆனால், தோ்தல்களில் தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜகவின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தோ்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com