மீனவா்கள் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவா்கள் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
Published on

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்: 5 மீன்பிடிப் படகுகளுடன் 47 மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அவா்களில் தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களைச் சோ்ந்த 30 மீனவா்களும், நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளும் அடங்கும்.

இந்தக் கைது சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம், நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவா்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும். இத்தகைய கைது சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, மீனவா்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதுடன், அவா்கள் தங்களது பாரம்பரிய தொழிலைத் தொடா்வதில் உள்ள மனஉறுதியையும் நம்பிக்கையையும் வெகுவாகப் பாதிக்கிறது.

வியாழக்கிழமை (அக். 9) நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சோ்ந்த 74 மீனவா்களும் இலங்கைக் காவலில் உள்ளனா். 242 மீன்பிடிப் படகுகளும் இலங்கை வசம் உள்ளன.

எனவே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விரைவாக விடுவிக்க அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்வதுடன், கூட்டுப் பணிக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com