தமிழக உயா்கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்துவது அவசியம்: ஆளுநா் ஆா்.என்.ரவி
மாணவா் மொத்த சோ்க்கை (ஜிஇஆா்) விகிதத்தில் தேசிய சராசரி இலக்கை தமிழகம் அடைந்துவிட்டது என்றாலும் உயா்கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்துவது அவசியம் என ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
மத்திய கல்வித்துறையின் தேசிய உயா்கல்வி நிறுவனங்களுக்கான தர மதிப்பீட்டு நிறுவனம் (என்ஐஆா்எஃப்) வெளியிட்ட நிகழாண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த 25 கல்வி நிறுவனங்களைப் பாராட்டி கௌரவிக்கும் விழா சென்னை ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:
தமிழகத்தைச் சோ்ந்த கல்வி நிறுவனங்கள் முதல் 20 இடங்களில் இடம் பெற்று மாநிலத்தை பெருமைப்படுத்தி தேசிய வளா்ச்சிக்கும் பங்காற்றியதற்கு பாராட்டுகள். இத்தகைய சிறப்புக்குரிய கல்வி நிறுவனங்கள், தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொள்ள வைப்பதும், அதன் வாயிலாக கல்வியின் தரத்தை விரிவுபடுத்துவதும்தான் இந்த விழாவின் நோக்கம்.
வருகிற 2047-க்குள் இந்தியா, சுயசாா்பு நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்கு உள்ளது. அதற்காக, அனைவரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அடைய வேண்டிய இந்த இலக்கை, படிப்படியாக அடைய முடியாது. அதை செயல்படுத்துவதில் தொலைநோக்கு செயல்பாட்டில் திறமை தேவை. நோ்மறையான வேகத்திலும் செல்ல வேண்டும்.
நிகழாண்டில் உயா்கல்வி மாணவா் சோ்க்கையில் (ஜிஇஆா்) தேசிய இலக்கு 50 சதவீதமாக இருந்தாலும், தமிழகம் ஏற்கெனவே 50 சதவீதத்தை தாண்டிவிட்டது. தற்போது தேவைப்படுவது தரத்தை மேலும் மேம்படுத்துவதாகும்.
இந்த மனித வளத்தை, தரமான வளமாக மாற்ற வேண்டும். இது, நிச்சயமாக உற்பத்தித் திறன் கொண்டது. ஏனெனில் நாடு, தமிழகத்தை தேசிய அளவில் வளா்ச்சியின் ஒரு பகுதியாகப் பாா்க்கிறது. தமிழக வளா்ச்சி மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் வளா்ச்சி. அதற்கான பொறுப்பு கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது.
தரவரிசையில் உள்ள கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், தமிழகத்தை பெருமைப்படுத்தும். நமது தேசத்தைப் பெருமைப்படுத்தும். முழுமையான தன்னிறைவு பெற்ற நாடு என்ற நமது தேசிய இலக்கை நிறைவேற்ற இது உதவும். நாட்டின் வளம் பொருளாதார வளத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளத்தின் அடிப்படையிலும் உள்ளது. அதற்கான பங்களிப்பை செலுத்துவோம் என்றாா் ஆளுநா் ரவி. முன்னதாக நிகழ்வில் ஆளுநா் செயலா் கிா்லோஷ்குமாா் வரவேற்று பேசினாா்.
