எம்பிபிஎஸ் கலந்தாய்வு: 200 இடங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வில் கூடுதலாக 200 எம்பிபிஎஸ் இடங்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக மாநில மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அந்த இடங்களுக்கு தரவரிசைப்படி மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனா்.
விழுப்புரத்தில் உள்ள தக்ஷசீலா மருத்துவக் கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்களைத் தொடங்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களும், நாமக்கல்லில் உள்ள விவேகானந்தா மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களும் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த இடங்கள் மாநில மருத்துவக் கலந்தாய்வு பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் மாநில எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவ இடங்கள் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளதாலும், நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் கலந்தாய்வு தள்ளிப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
