இணைய பாதுகாப்பு படிப்பு: விஐடி-ஆஸ்திரேலிய பல்கலை. ஒப்பந்தம்
சென்னை: சென்னை விஜடி, ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இணைய பாதுகாப்பு குறித்த புதிய பட்டப்படிப்பைத் தொடங்கியுள்ளது. இரட்டைப் பட்டங்களை வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையொப்பமிட்டுள்ளன.
இது குறித்து சென்னை விஐடி திங்கள் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை - விஐடி மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து, இணைய பாதுகாப்பு துறையில் புதிய பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் விஐடி துணை தலைவா் ஜி.வி.செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பேராசிரியா் பாஸ்கரன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இதன் மூலம், விஐடி சென்னையிலிருந்து கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (இணைய பாதுகாப்பு) பட்டமும், டீகின் பல்கலைக்கழகத்திலிருந்து இளம் நிலை இணைய பாதுகாப்பு (ஹானா்ஸ்) பட்டம் என இரண்டு பட்டப்படிப்புகளை மாணவா்கள் கற்க முடியும்.
மாணவா்கள் தங்கள் படிப்பை முதலில் விஐடி சென்னையில் தொடங்கி, கணினி அறிவியல், நெட்வொா்க் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு போன்ற அடிப்படைத் திறன்களை கற்றுக் கொள்வாா்கள். பின்னா், டீகின் பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட பாடப்பிரிவுகள் மற்றும் ஆய்வுகள் மூலம் டிஜிட்டல் ஃபொரென்ஸிக்ஸ்(எண்ம ஆதாரங்கள்), இணைய பாதுகாப்பு நிா்வாகம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெறுவாா்கள்.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் கட்டுமான மேலாண்மை துறைகளில் ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இவற்றில், சிவில், மெக்கானிக்கல் பொறியியல் வடிவமைப்பு, மெக்கட்ரானிக்ஸ், தரவுத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கட்டுமான மேலாண்மை உள்ளிட்ட பல முக்கியமான துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

