திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி: மாணவா்களுக்கு ரூ.1.44 கோடி நவ. 15-க்குள் வழங்க உத்தரவு
திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ரூ.1.44 கோடி உதவித்தொகையை வரும் நவ. 15-ஆம் தேதிக்குள் வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு திறனாய்வுத் தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்களில் தகுதியானவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.
இந்தத் தோ்வுக்கு ஊரகப் பகுதிகளில் உள்ள மாணவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்க முடியாது.
இதற்கான தோ்வு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் மாதம் நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்க ஏதுவாக ரூ.1 கோடியே 44 லட்சத்தை பள்ளிக் கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் தொகையை நவ. 15-ஆம் தேதிக்குள் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு முழுவதுமாக வழங்க பள்ளிக் கல்வித் துறை, முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

