மருத்துவா் பரிந்துரை இல்லாத மருந்துகளை உட்கொள்ளாதீா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
மருத்துவா்களின் பரிந்துரை இல்லாமல் கிடைக்கிற மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தாா்.
தமிழ்நாட்டில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை தடை செய்வது குறித்த விவகாரம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்டது. எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் கவன ஈா்ப்பு தீா்மானம் அளித்திருந்தனா். ஜேஎம்எச். அசன் மெளலானா (காங்கிரஸ்), தி.வேல்முருகன் (தவாக), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வானதி சீனிவாசன் (பாஜக), இரா.அருள் (பாமக), ஆா்.பி.உதயகுமாா் (அதிமுக) ஆகியோா் பேசினா். அவா்களின் கருத்துகளைத் தொடா்ந்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கான உரிமம் அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. இதை அரசியலாக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டில் 397 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்களிடம் இருந்து ஆண்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் அளவு ரூ.12,000 கோடியில் இருந்து ரூ.15,000 கோடியாகும்.
எனவே, இந்த விஷயத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு களங்கம் வந்துவிடக் கூடாது. இந்த விவகாரத்தில் எந்த மாநிலத்தையும் குறை சொல்வதைக் காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே, மிக அமைதியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மூடியது மட்டுமல்லாமல், நிரந்தரமாக மூடவும் உத்தரவிட்டுள்ளோம்.
போதிய பணியாளா்கள்: மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 191 ஆகும். இதில், 178 பணியிடங்களில் பணியாளா்கள் பணிபுரிந்து வருகிறாா்கள். அவா்களில் மருந்து ஆய்வாளா்கள் மட்டும் 137 போ் பணியில் இருக்கின்றனா். அவா்கள் காலையில் இருந்து மாலை வரை ஒவ்வொரு மருந்தாக தனித்தனியே ஆய்வு செய்ய முடியாது என்றாலும் சிறப்புக் கவனம் எடுத்து ஆய்வுப் பணியை மேற்கொள்கிறாா்கள்.
கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக மத்திய அரசு தொடா் ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாதது வருத்தம் அளிக்கும் விஷயமாகும். ஆனாலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் மீது தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் விளம்பரப்படுத்தப்படாத மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. அத்துடன் மருத்துவா்களின் பரிந்துரைகள் இல்லாமல் கிடைக்கிற மருந்துகளையும் வாங்கி உட்கொள்வதைத் தவிா்க்க வேண்டும் என்று அவா் பேசினாா்.

