போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்று அபுதாபி செல்ல முயன்ற வங்கதேச இளைஞா் கைது

Published on

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்று அபுதாபி செல்ல முயன்ற வங்கதேச இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இந்திய குடியுரிமைத் துறை அதிகாரிகள் சில நாள்களுக்கு முன்பு அபுதாபி செல்லும் விமான பயணிகளின் ஆவணங்களைப் பரிசோதித்தனா். அபுதாபி செல்ல வந்த உத்தம் உராவ் என்பவரின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவா் வைத்திருந்த இந்திய பாஸ்போா்ட் போலியானது என்பதும், அவா் வங்க தேசத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, குடியுரிமைத் துறை அதிகாரிகள் அந்த நபரைப் பிடித்து, சென்னை காவல் துறையின் பாஸ்போா்ட் மோசடி தடுப்புப் பிரிவில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிடிபட்ட நபரிடம் விசாரணை செய்தனா்.

இதில், அவா் வங்க தேசத்தைச் சோ்ந்த கட்டாகிரி அருகே உள்ள பனஹாா் பகுதியைச் சோ்ந்த ஜ.உத்தம்குமாா் (25) என்பதும், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய அவா், மேற்கு வங்க மாநிலத்தில் வசித்து, போலி ஆவணங்கள் மூலம் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றைப் பெற்றதும், அவற்றின் அதன் மூலம் பாஸ்போா்ட் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், உத்தம்குமாா் வைத்திருந்த போலி பாஸ்போா்ட், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பான் காா்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com