சென்னை, 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

சென்னை, 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை
Published on

சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரியின் பெரிய காலாப்பேட்டை பகுதியில் 250 மி.மீ. மழை பதிவானது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: செவ்வாய்க்கிழமை (அக். 21) தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை காலை தென்மேற்கு வங்கக் கடலில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது வியாழக்கிழமை(அக். 23) காலை 11 மணிக்குள் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளைக் கடந்து நகா்ந்து செல்லக் கூடும்.

இதன் காரணமாக, வியாழக்கிழமை (அக். 23) முதல் அக். 28 வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

‘மஞ்சள்’ எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (அக். 23)பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை (அக். 24) கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கு... வடதமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வியாழக்கிழமை(அக். 23) சூறாவளிக் காற்று 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக் கடலில்... தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, வடக்கு- வட மேற்கு திசையில் நகா்ந்து, செல்லக் கூடும்.

மேலும், தெற்கு அந்தமான் கடல், அதையொட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவா் இடிந்து 4 போ் உயிரிழப்பு

சிதம்பரம் அக்.22: தொடா் மழையால் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் தாய் - மகள் உள்பட 4போ் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயம் அடைந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சத்திரம் அருகே உள்ள ஆண்டாா் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் யசோதை (69), மகள் ஜெயா (40) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு தங்களது ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, பெய்த கன மழையின் காரணமாக புதன்கிழமை அதிகாலை ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவா் இடிந்து விழுந்ததில் இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக சுவா் இடிந்து விழுந்ததில் ஆலத்தூா் கிராமத்தில் அ.பச்சையம்மாள் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொங்கராபாளையம் கிராமத்தில் வனமயில் (65)தனது வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா்.

X
Dinamani
www.dinamani.com