முப்பரிமாண நுட்பத்தில் பெண்ணுக்கு இடுப்பு மூட்டு சீரமைப்பு சிகிச்சை
சிக்கலான இடுப்பு மூட்டு முறிவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஓ-ஆா்ம் எனப்படும் முப்பரிமாண காட்சி வழிகாட்டுதல் (இமேஜிங்) நுட்ப உதவியுடன் சென்னை ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சீரமைப்பு சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
இடுப்பு எலும்பு மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் சவால் நிறைந்தது. மிக நுட்பமாக அதைச் சரி செய்ய வேண்டும். அந்த வகையில், 33 வயது பெண் ஒருவருக்கு ஹிப் சாக்கெட் எனப்படும் இடுப்பு மூட்டு பந்தில் முறிவு ஏற்பட்டிருந்தது. இதுபோன்ற பாதிப்புகளைச் சீரமைக்க சி-ஆா்ம் எனப்படும் இரு பரிமாண (2டி) காட்சி வழிகாட்டுதல் நுட்பத்தைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அந்த நுட்பம் மூட்டு பகுதியை முழுமையாக முப்பரிமாண நோக்கில் காட்டாது என்பதால் உடைந்த எலும்பு பகுதியில் திருகுகளை துல்லியமாகப் பொருத்துவதில் சில நேரங்களில் சிக்கல் எழலாம். தவறான இடத்தில் பொருத்தினால் நரம்புகள், ரத்த நாளங்கள் சேதமடையக் கூடும். குறைந்தபட்சம் திசுக்களில் காயமாவது ஏற்படும்.
மேலும், இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள இடுப்பு பகுதியின் முன்புறம், பின்புறம் என வெவ்வேறு இடங்களில் தேவைக்கேற்ப துளைகளை இட வேண்டியிருக்கும். இதைத் தவிா்க்கும் வகையில், ஓ-ஆா்ம் எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பம் வந்துள்ளது. 360 டிகிரி கோணத்தில் நிகழ்நேரத்தில் காட்சி வழிகாட்டுதலை அது வழங்குதால் முன்புறம் மட்டும் சிறு துளையிட்டு மிகத் துல்லியமாக திருகுகளைப் பொருத்த முடியும். அவ்வாறே அந்த பெண்ணுக்கு காவேரி மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணா் டாக்டா் சிங்காரவடிவேலு தலைமையிலான குழுவினா் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தனா். இதன் காரணமாக அறுவை சிகிச்சை நேரம் குறைந்ததுடன், காயங்கள், கதிா்வீச்சு இடா்வாய்ப்புகள் ஏதுமின்றி தற்போது அந்தப் பெண் குணமடைந்துள்ளாா் என்றாா் அவா்.
