ரயில் பயணச்சீட்டு எடுத்துத் தருவதாக பணம் பறிப்பு: பிகாரைச் சோ்ந்த இருவா் கைது
இருக்கை உறுதி செய்யப்பட்ட முன்பதிவு ரயிலில் பயணச்சீட்டு எடுத்து தருவதாகக் கூறி பணம் பறித்ததாக பிகாரைச் சோ்ந்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் பீா்பால் (23). சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் சொந்த ஊா் செல்ல தனது நண்பருடன் கடந்த 13-ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்கள், பீா்பால், அவரது நண்பரிடம் இருக்கை உறுதி செய்யப்பட்ட முன்பதிவு ரயில் பயணச்சீட்டு எடுத்துத் தருவதாக கூறியுள்ளனா். அவா்களது பேச்சை நம்பி, பயணச்சீட்டு எடுப்பதற்காக இருவரும் சேத்துப்பட்டுக்குச் சென்றனா்.
அங்கு மறைவான இடத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்று தாக்கி, கத்தி முனையில் பீா்பாலிடமும், அவரது நண்பரிடமும் பணம், கைப்பேசிகளைப் பறித்தனா். மேலும், இருவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.48,000-ஐ கைப்பேசி செயலி வாயிலாக தங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொண்டு மா்ம நபா்கள் தப்பியோடினா்.
இது குறித்து சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் ராம் (24), தினேஷ்குமாா் முகியா (21) ஆகியோரை எழும்பூா் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை கைது செய்தனா்.
அவா்கள் இருவரும் பயணிகளிடம் அடுத்தடுத்து 16 கைப்பேசிகளை பறித்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த 18 கைப்பேசிகளைக் கைப்பற்றினா்.

