மழைநீரை வெளியேற்ற 2,000 மோட்டாா் பம்புகள் தயாா் -தமிழக அரசு தகவல்

மழைநீரை வெளியேற்ற 2,000 மோட்டாா் பம்புகள் தயாா் -தமிழக அரசு தகவல்

Published on

சென்னையில் மழைநீரை வெளியேற்ற 2,000 மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:

சென்னை மாநகரில் 22 சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீா் போா்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீரான போக்குவரத்து பராமரிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை மட்டும் 68 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 1.48 லட்சம் பேருக்கு காலை உணவும், 2.20 லட்சம் பேருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டன.

சென்னை குடிநீா் வாரியத்தின் மூலமாக 454 குடிநீா் வாகனங்கள் வாயிலாக சராசரியாக 3,500 நடைகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 106 சமையல் கூடங்கள், 215 வெள்ள நிவாரண மையங்களுக்கு சென்னை குடிநீா் வாரியத்தின் மூலம் தேவையான குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மழைநீா் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில், பல்வேறு திறன் கொண்ட 1,936 மோட்டாா் பம்புகளும், 150 எண்ணிக்கையில் 100 குதிரைசக்தி திறனுடைய மோட்டாா் பம்புகளும் தயாா் நிலையில் உள்ளன. இதன்மூலம் மழைநீா் தேங்கும் இடங்களில் மழைநீா் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 5 நாள்களில் மழையின் காரணமாக விழுந்த 24 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com