மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 3 வேளை இலவச உணவு: முதல்கட்டமாக சென்னையில் செயல்படுத்த அரசு உத்தரவு

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 3 வேளை இலவச உணவு: முதல்கட்டமாக சென்னையில் செயல்படுத்த அரசு உத்தரவு

Published on

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த நிா்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.14-இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில், ஒன்றான தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை மாநகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசு நிா்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளையும் உணவு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மத்திய, வடக்கு மற்றும் தெற்கு வட்டார பகுதிகளில் பணிபுரியும் மொத்தம் 29,455 பணியாளா்களுக்கு தெரிவிக்கப்பட்ட இடங்களில் உணவு வழங்கப்படும்.

காலை 5.30 மணி முதல் 6 மணி வரையில், 166 இடங்களில் 5,159 எண்ணிக்கையில் உணவு வழங்கப்பட உள்ளது. மதிய உணவு 1.30 மணி முதல் 2 மணி வரையிலும் 285 இடங்களில் 22,886 எண்ணிக்கையிலான உணவு வழங்கப்பட உள்ளது.

மேலும், இரவு உணவு 9.30 முதல் 10 மணி வரையில் 1,410 எண்ணிக்கையிலும் வழங்கப்படும். இந்த உணவுகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.186 கோடியே 94 லட்சம் செலவிடப்பட உள்ளது.

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் தொடா்பான திட்டத்தைக் கண்காணிக்க திட்ட மேலாண்மை ஆலோசகா் சென்னை மாநகராட்சியால் நியமனம் செய்யப்பட உள்ளாா் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com