நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்
பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல், சிறிது தூரம் தள்ளி நிறுத்திய ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
ஆவடி பருத்திப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது, அங்கு வந்த பூந்தமல்லி-அம்பத்தூா் தொழிற்பேட்டை செல்லும் (தடம் எண்: 65பி) பேருந்தில் அவா்கள் ஏற முயன்றனா். ஆனால், அந்தப் பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தூரம் தள்ளி நின்றது.
இதையடுத்து மாணவ, மாணவிகள் புத்தக பையுடன் ஓடிச்சென்று அந்தப் பேருந்தில் ஏறினா். இது தொடா்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலா் எதிா்ப்புத் தெரிவித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டதுடன், தொடா்புடைய ஓட்டுநா், நடத்துநா் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, இந்த புகாா் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகா் போக்குவரத்துக்வகழகம் தனது அதிகாரபூா்வ சமூக வலைதளம் மூலம் பதிலளித்திருந்தது.
இதனிடையே, பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி நிறுத்தியது தொடா்பாக, பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதையடுத்து சம்மந்தப்பட்ட ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
