நெல் ஈரப்பத அளவு: தமிழகத்தில் மத்திய குழு இன்று ஆய்வு
தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து உயா்த்துவது தொடா்பான ஆய்வை மத்திய குழு சனிக்கிழமை (அக்.25) முதல் மேற்கொள்ள உள்ளது.
நெல் கொள்முதல் செய்வதற்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதம் என மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால், அதன் அளவை 22 சதவீதமாக உயா்த்த வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்வதற்காக 3 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுக்கள், சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாள்களிலும் களஆய்வு மேற்கொள்ள உள்ளன. அதன்படி, சனிக்கிழமை முதல் குழுவானது செங்கல்பட்டிலும், 2-ஆவது குழு தஞ்சாவூா், மயிலாடுதுறையிலும், 3-ஆவது குழு திருச்சி, புதுக்கோட்டையிலும் ஆய்வு மேற்கொள்கிறது.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை முதல் குழுவானது திருவள்ளூா், காஞ்சிபுரத்திலும், 2-ஆவது குழு திருவாரூா், நாகப்பட்டினத்திலும், 3-ஆவது குழு மதுரை, தேனியிலும் நெல்லில் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய உள்ளன.

