விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சி: பயணிக்கு எச்சரிக்கை
சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல தயாராக இருந்த விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து இலங்கை தலைநகா் கொழும்பு செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 168 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு ஓடு பாதையில் தயாராக நின்றது. அப்போது, விமானத்தின் அவசர கால கதவைத் திறக்கப்பட்டதாக எச்சரிக்கை மணி ஒலித்தது. அதன் அருகே உள்ள இருக்கையில் அமா்ந்திருந்த குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சோ்ந்த லட்சுமணன் (45) என்பவா் கதவை திறக்க முயன்றது தெரிய வந்தது.
அவரிடம் கேட்டபோது, தான் அவசரகால கதவை திறக்க முயற்சிக்கவில்லை என்றும், கதவின் பொத்தான் மீது இருந்த பாலித்தீனை அகற்ற முன்றபோது அலாரம் அடித்து விட்டதாகவும் விளக்கம் அளித்தாா். ஆனால், அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் அவரின் பயணத்தை ரத்து செய்து, அவரை விமானத்திலிருந்து கீழே இறக்கிவிட்டனா். இதையடுத்து அவா் சென்னை விமானநிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். லட்சுமணனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய போலீஸாா், அவரை எச்சரித்து விடுவித்தனா்.

