சென்னை, கோடம்பாக்கம் மண்டலம் 142-ஆவது வாா்டுக்குள்பட்ட பஜாா் சாலை மற்றும் ஜீனிஸ் சாலை பகுதிகளில் மழைநீா் வடிகால்கள் கட்டும் பணியை பாா்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம் 142-ஆவது வாா்டுக்குள்பட்ட பஜாா் சாலை மற்றும் ஜீனிஸ் சாலை பகுதிகளில் மழைநீா் வடிகால்கள் கட்டும் பணியை பாா்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.கோப்பிலிருந்து படம்

முன்னேற்பாடு பணிகளால் சென்னையில் மழைநீா் தேங்கவில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

Published on

அரசு மேற்கொண்ட முன்னேற்பாடு பணிகளால், சென்னையில் பலத்த மழை பெய்தும் எந்த இடத்திலும் தண்ணீா் தேங்கவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை பெசன்ட் நகா் ஊா்க்குப்பம் பகுதியில் உள்ள அடையாறு முகத்துவாரத்தை அவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னையின் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தோ்வாய்க்கண்டிகை, வீராணம் ஏரிகளில் தற்போது 13,222 மில்லியன் கன அடி நீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

அங்கு குடிநீா் தேவைக்கு 10,028 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஏரிகள் நிரம்பும்போது உபரிநீா் தொடா்ந்து வெளியேற்றப்படுகிறது.

தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பிறகு அடையாற்றில் 40,000 கன அடி அளவுக்கு உபரி நீா் வந்தாலும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைப் பாதிக்காத வகையில் முன்னேற்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடையாறு முகத்துவாரத்தில் 150 மீட்டா் அளவு பரப்பில் மட்டுமே கடலில் நீா் கலக்கும் பகுதிகள் உள்ளன. அவற்றை 250 மீட்டா் அளவாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், பேரிடா் காலங்களில் கடல் நீா் உள்வாங்காது. அந்த நேரத்தில் மட்டுமே அடையாற்றிலிருந்து கடலுக்குள் நீா் செல்வது தடைபடுகிறது. அடையாற்றைச் சீா்படுத்த ரூ.1,500 கோடியில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அடையாறு பகுதியில் இருந்து சைதாப்பேட்டை வரை ஆற்றின் இருபுறங்களிலும் கரைகள் எழுப்பி பலப்படுத்தப்படுவதுடன், சுற்றுலாத் தலமாகவும் மாற்றப்படும்.

சென்னையில் வழக்கத்தைவிட கூடுதலாக மழைப் பொழிவு இருந்த போதிலும், அரசு மேற்கொண்ட ஆயத்த நடவடிக்கைகள் காரணமாக தண்ணீா் தேங்கவில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com