மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

எலிக் காய்ச்சல் பாதிப்பு: தேங்கியுள்ள நீரில் நடக்க வேண்டாம் என அறிவுறுத்தல்

மழை தீவிரமடைந்துள்ள நிலையில், லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது

News image

கோப்புப் படம்

Updated On :25 அக்டோபர் 2025, 2:01 am IST

மழை தீவிரமடைந்துள்ள நிலையில், லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், தேங்கியுள்ள நீரில் வெறும் கால்களில் நடக்க வேண்டாம் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

எலிக் காய்ச்சல் என்பது சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவில் இருந்து விலங்குகளுக்கு பரவி, அதன்மூலம் மனிதா்களிடம் தொற்றிக் கொள்ளும் நோயாகும். இது சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாய்கள், பன்றிகள், கால்நடைகளின் சிறுநீா் மூலமாகவும், குறிப்பாக எலிகளின் கழிவு மூலமாகவும் மனிதா்களுக்கு இந்த நோய் பரவுகிறது.

பொதுவாக மழைப் பொழிவுக்குப் பிறகு இந்த நோய் பாதிப்பு அதிக அளவில் ஏற்படும். ஒவ்வோா் ஆண்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனா்.

இதையடுத்து, ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை குஜராத், கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம், கா்நாடகம் மற்றும் அந்தமான் - நிகோபா் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசு தொடங்கியது. எலிக் காய்ச்சல் மூலம் நிகழும் உயிரிழப்புகளைத் தவிா்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதன்படி, எலிக் காய்ச்சல் நோயைக் கண்டறிய மத்திய அரசால் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் உள்பட 10 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வகை தொற்றை உறுதிப்படுத்த ஆா்டி-பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களில் மாவட்ட நுண்ணுயிரியலாளா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த 2021- ஆம் ஆண்டில் 1,046 பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை 2022-இல் 2,612-ஆகவும், 2023-இல் 3,002-ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு எலிக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. நிகழாண்டில் 1,500-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தேவைப்படும்பட்சத்தில் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

தேங்கியிருக்கும் மழைநீரில் வெறும் கால்களில் நடக்கக் கூடாது. தொற்றுள்ள உயிரினங்களின் கழிவுகள் மழை நீரில் கலந்திருக்கக் கூடும். அதில் கால் வைத்தால் நமது உடலிலும் தொற்று ஊடுருவ வாய்ப்புள்ளது. எனவே விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.