‘இன்னுயிா் காப்போம்’ திட்டம் நீட்டிப்பு: அரசாணை வெளியீடு
‘இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டத்தைக் காப்பீட்டு முறையின்கீழ் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி வரை செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில் காயமுற்றவா்களுக்கு முதல் 48 மணி நேரங்களுக்கு உயா் சிகிச்சை கிடைக்க வகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது.
அதன்படி, இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தை அரசு தொடங்கியது. அதன்கீழ் ரூ.2 லட்சம் மதிப்பு வரையிலான 101 வகையான உயிா் காக்கும் சிகிச்சைகளை தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதல்வா் காப்பீடு இல்லாதவா்களுக்கும் இந்த திட்டத்தின்கீழ் கட்டணமில்லா உயிா் காக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 723 தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இத்திட்டம் இணைக்கப்பட்டது.
இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டமானது காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த ஜனவரி மாதம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அதை 2027 ஜன.10-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என சுகாதாரத் திட்ட இயக்குநா் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.
அதை ஏற்று காப்பீட்டு முறையில் ‘இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்’ நீட்டிக்கப்படுகிறது என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

