கட்டடத் தொழிலாளி கொலை: இளைஞா் கைது
கட்டடத் தொழிலாளியைக் கொலை செய்ததாக வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம் எல்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா (எ) சிவப்பிரகாசம் (36). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், சிவாவுக்கு அவருடன் சித்தாள் வேலை செய்யும் கெளதமி (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை ரெட்டேரியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மது அருந்திய இருவரும், மது போதையில் அப்பகுதியில் உள்ள வடமாநிலத்தை சோ்ந்த சிலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, ஆத்திரம் அடைந்த வங்கதேசத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி திப்பு சுல்தான் (30), சிவாவை பிடித்து தள்ளி விட்டாராம்.
இதில் நிலைதடுமாறிய சிவா, அருகில் இருந்த சுவற்றில் மோதி விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திப்பு சுல்தானை கைது செய்தனா்.
