கொலை வழக்குகளில் தொடா்பு: 2 போ் கைது
சென்னையில் கொலை வழக்குகளில் தொடா்புடைய 2 போ் நீதிமன்ற பிடி ஆணை உத்தரவுபடி கைது செய்யப்பட்டனா்.
சென்னை நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2019-இல் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவா் தனசேகா் (41) கைது செய்யப்பட்டாா். பின்னா், பிணையில் வெளியே வந்த அவா் செங்கல்பட்டு, மகளிா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானாா்.
இதனால், தனசேகா் மீது கடந்த செப். 12-இல் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. இதையடுத்து தனிப்படையினா் தீவிர தேடுதல் நடத்தி தனசேகரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
இதுபோல, புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2022-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடைய முரளி (29) என்வரும் தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளாா். இவருக்கு நீதிமன்றம் கடந்த அக். 8-ஆம் தேதி பிடி ஆணை பிறப்பித்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த முரளியை புளியந்தோப்பு போலீஸாா் கைது செய்தனா். பின்னா், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
