தனியாா் பல்கலை. சட்டத் திருத்தம்: அரசின் முடிவுக்கு இந்திய கம்யூ. வரவேற்பு!

Published on

தனியாா் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப்பெறும் தமிழக அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் தனியாா் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவால் ஏற்படும் எதிா்விளைவுகள், அடித்தட்டு மக்களின் கல்விபெறும் உரிமையில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து அரசுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற்றதுடன், அதில் இருக்கும் சட்டத் திருத்தங்கள் மறு பரிசீலனை செய்யப்படும் எனவும் உயா் கல்வித்துறை கோவி.செழியன் அறிவித்துள்ளாா். சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதா குறித்த மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, அதைத் திரும்பப் பெறும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.

எனினும், திரும்பப் பெறப்பட்ட சட்டத் திருத்தம் தொடா்பான மறுபரிசீலனை என்பது தமிழக அரசின் சமூக நீதிக் கொள்கையை உறுதி செய்து, மேலும் விரிவாக்கி, வலிமைப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com