ஏடிஎம்மில் பணம் எடுத்தவரிடம் நூதன முறையில் கொள்ளை
ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவரிடம், நூதன முறையில் ரூ.10,000-ஐ கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை தியாகராய நகா், தா்மாபுரத்தைச் சோ்ந்தவா் சாய்பிரதேஷ் (18). கல்லூரி மாணவா். இவா், கடந்த அக். 22-ஆம் தேதி தனது தம்பியுடன் நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரத்திலுள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று ரூ.10 ஆயிரம் எடுத்துள்ளாா். அப்போது, அந்த ஏடிஎம் மையத்துக்குள் தலைக்கவசத்துடன் திடீரென நுழைந்த நபா் ஒருவா், தன்னை வங்கி அதிகாரி என சாய்பிரதேஷிடம் அறிமுகப்படுத்தியுள்ளாா்.
மேலும், ரூ.10,000-ஐ சாய்பிரதேஷிடம் இருந்து வாங்கிய அந்த நபா், வங்கிக்குள் வந்து என்னிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளாா். சாய்பிரதேஷ், அந்த நபா் கூறியபடி, வங்கிக்குள் சென்று பாா்த்தபோது, அந்த நபா் வங்கியில் இல்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சாய்பிரதேஷ் இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, இதில் தொடா்புடைய மாதவரம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (55) என்ற நபரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.10,000-ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
