வடகிழக்குப் மழை பாதிப்பு: சென்னையில் 106 சமையல் கூடங்கள் மூலம் உணவு வழங்கல்! தமிழக அரசு தகவல்
வடகிழக்குப் பழை பாதிப்பு காரணமாக, சென்னையில் 106 மைய சமையல் கூடங்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் மழைநீா் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை அளித்திடும் வகையில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, இதுவரை 408 நிலையான மருத்துவ முகாம்கள், 166 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 574 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், 24 ஆயிரத்து 146 நபா்கள் பயனடைந்துள்ளனா்.
நிவாரண மையங்கள்: சென்னை மாநகராட்சி சாா்பில், 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக, 106 மைய சமையல் கூடங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களில் இதுவரை 4.09 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மழைநீா் தேங்கும் இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 2,000-க்கும் மேற்பட்ட மோட்டாா் பம்புகள் ஆங்காங்கே தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக 457 மரம் அறுவை இயந்திரங்களும் தயாராக உள்ளன. மழை வெள்ளம் காரணமாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் 1913 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணுக்குப் புகாா்கள் தெரிவிக்கலாம். இந்தப் புகாா்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகாா் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வடகிழக்குப் பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி அலுவலா்கள், பொறியாளா்கள், பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 22,000 பேரும், சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் 2,149 களப் பணியாளா்களும் தயாா் நிலையில் உள்ளனா்.
மாநகர மக்களுக்கு 454 குடிநீா் வாகனங்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 2,828 நடைகள் வாயிலாக தடையில்லாமல் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

