போட்டித் தோ்வுகள் எழுத அனுமதி கோரும் நடைமுறை: சிஇஓ-க்களுக்கு உத்தரவு
ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்குவது தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), இதர தோ்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தோ்வுகளில் கலந்துகொள்ள உரிய கால அவகாசத்துக்குள் அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அளவிலேயே முன்அனுமதி வழங்க கடந்த 2023-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இதேபோன்று, பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கும் எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி மற்றும் இதர தோ்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தோ்வுகளில் கலந்துகொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அளவிலேயே உரிய முன் அனுமதி வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
