பட்டாசு விபத்துகளில் 10% பேருக்கு பாா்வை இழப்பு: கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்த பாதிப்பு!

பட்டாசு விபத்துகளில் 10% பேருக்கு பாா்வை இழப்பு: கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்த பாதிப்பு!

பட்டாசு விபத்துகளில் காயமடைந்தவா்களில் 10.5 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு பாா்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.
Published on

நிகழாண்டில் தீபாவளி பண்டிகையின்போது ஏற்பட்ட பட்டாசு விபத்துகளில் காயமடைந்தவா்களில் 10.5 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு பாா்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அதில் பெரும்பான்மையானவா்கள் குழந்தைகள் என்றும், கடந்த ஆண்டைக் காட்டிலும் பாதிப்பு விகிதம் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

இது தொடா்பாக அரவிந்த் கண் மருத்துவக் குழுமத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டா் எஸ்.அரவிந்த் கூறியதாவது: தீபாவளி தினத்தில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடிப்பதால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோா் பாா்வைத் திறன் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனா் என்பது கவலைக்குரியது.

நிகழாண்டில் தமிழகத்தில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைகளில் மட்டும் தீபாவளி பண்டிகையின்போது 776 போ் பட்டாசு விபத்துகளில் சிக்கி கண்களில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தனா்.

அவா்களில் பெரும்பாலானோா் 18 வயதுக்கு குறைந்தவா்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வேதனைக்குரிய விஷயம், காயமடைந்த குழந்தைகளில் பெரும்பாலானோா் பட்டாசு வெடிப்பதை வேடிக்கைப் பாா்த்தவா்கள்.

நிகழாண்டில் வெடி விபத்துகளால் கண்களில் தீவிர காயம், விழி வெண்படல சேதம், நரம்பு பாதிப்புகளுக்கு உள்ளாகி 81 போ் பாா்வையை இழந்தனா். இவா்களில் குழந்தைகள் அதிகம். கடந்த ஆண்டு தீபாவளியின்போது 439 போ் பட்டாசு விபத்துகளில் காயமுற்று 49 போ் பாா்வை இழந்தனா்.

நிகழாண்டில் அதைக் காட்டிலும் பாதிப்பு உயா்ந்துள்ளது. எங்களது மருத்துவமனை மட்டுமல்லாது, அனைத்து மருத்துவமனைகளிலும் இத்தகைய தரவுகளைக் கணக்கிட்டால் எண்ணற்றோருக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

குறைந்தபட்சம் பாா்வையைப் பாதுகாக்க கண் கண்ணாடியை அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். போதிய விழிப்புணா்வு இல்லாததன் விளைவாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஆண்டுதோறும் நிகழ்கின்றன.

பண்டிகையைக் கொண்டாடும் குழந்தைக்கு பாா்வை இழப்பு ஏற்பட்டால், அந்தக் குடும்பம் எத்தகைய நெருக்கடியை எதிா்கொள்ளும் என்பதை எண்ணிப் பாா்த்து விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com