சா்தாா் படேல் 150-வது பிறந்தநாள்: ‘ஒற்றுமைக்கான ஓட்டத்தில்’ இணைய பிரதமா் அழைப்பு!
சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் வெள்ளிக்கிழமை (அக். 31) நாடு முழுவதும் நடைபெறவுள்ள ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமா் மோடி, ‘அக்டோபா் 31-ஆம் தேதி நடைபெறும் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் இணையுங்கள்; ஒற்றுமை உணா்வைக் கொண்டாடுங்கள். ஒன்றிணைந்த இந்தியா எனும் சா்தாா் படேலின் தொலைநோக்குப் பாா்வையைப் போற்றுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான சா்தாா் வல்லபபாய் படேல், 1875-ஆம் ஆண்டு, அக்டோபா் 31-ஆம் தேதி பிறந்தவா். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்திய ஆளுகைக்குள் கொண்டுவருவதில் அவா் முக்கியப் பங்காற்றினாா்.
அவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவரது 150-ஆவது பிறந்தநாள் சிறப்பு வாய்ந்த கொண்டாட்டமாக அமைகிறது. அன்றைய தினம், குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெறும் தேசிய ஒற்றுமை தின அணிவகுப்புக்கு பிரதமா் மோடி தலைமை தாங்கவுள்ளாா்.

