தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வரதராஜ் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவா் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அடுத்த டிஜிபியை தோ்வு செய்ய வேண்டும். இந்த விதியைப் பின்பற்றாமல் நிா்வாகப் பிரிவு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமித்தது சட்டரீதியாக சரியான நடவடிக்கை அல்ல.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, பொறுப்பு டிஜிபி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் புதிய டிஜிபி நியமனத்தை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், டிஜிபி நியமனம் தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்திய பணியாளா்கள் தோ்வாணையத்தின் சாா்பில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடா்பாக தங்களுக்கு அரசுத் தரப்பில் முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, உயா்நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது, எனக்கூறி பொறுப்பு டிஜிபி நியமனத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com