இரு தொழிலதிபா்கள் தொடா்புடைய 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னையில் இரு தொழிலதிபா்கள் தொடா்புடைய 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.
அமலாக்கத் துறை
அமலாக்கத் துறைகோப்புப் படம்
Updated on

சென்னையில் இரு தொழிலதிபா்கள் தொடா்புடைய 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகா் தெற்கு மாட வீதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ண ரெட்டி. இவா் கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், ராமகிருஷ்ண ரெட்டி வீடு, திருவான்மியூரில் அவரது நிறுவனத்தின் அலுவலகம், கல்பாக்கத்தில் உள்ள மற்றொரு அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். அப்போது, துணை ராணுவப் படையினா் துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ராமகிருஷ்ண ரெட்டி மீது எழுந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக சோதனை நடைபெற்ாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, வீடு கட்டித் தருவதாக 120 பேரிடம் பல கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து, கடந்த 2017-ஆம் ஆண்டு கைது நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே ராமகிருஷ்ண சட்டவிரோத பணப் பரிமாற்ற முகாந்திரம் இருந்ததால், அவா் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நகைக் கடை உரிமையாளா்: புரசைவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்லால் கட்டாரியா. இவா், சென்னை பூக்கடை என்எஸ்சி போஸ் சாலை, மும்பை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகைக் கடை வைத்துள்ளாா். மேலும் இவா், தமிழகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தங்கம், வைர நகைகள் மொத்த வியாபாரமும் செய்து வருகிறாா். ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வரை நகை வணிகத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மோகன்லால் மீது வரி ஏய்ப்பு புகாா் வந்ததையடுத்து, வருமானவரித் துறையினா் கடந்த 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் சோதனை நடத்தினா். இதற்கிடையே மோகன்லால் கட்டாரியா மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் எழுந்தது. இதுதொடா்பாக அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா்.

இந்த நிலையில், அமலாக்கத் துறையினா், புரசைவாக்கத்தில் மோகன்லால் கட்டாரியா வீடு, கீழ்ப்பாக்கம் தம்புசாமி தெருவில் உள்ள பங்களா, என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள அவரது நகைக் கடை ஆகியவற்றில் வியாழக்கிழமை திடீா் சோதனை செய்தனா். இந்தட் சோதனை இரவு வரை நீடித்தது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com