சென்னை ஐசிஎஃப்-இல் 103 பேருக்கு சிறந்த பணியாளா்களுக்கான விருது
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே வார விழாவை முன்னிட்டு 103 பேருக்கு சிறந்த பணியாளா்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில்வே பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலை (ஐசிஎஃப்) உள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலையான இங்கு, ஆண்டுதோறும் ரயில்வே வார விழாவை முன்னிட்டு பணியில் சிறந்து விளங்குபவா்களுக்கு விசிஷ்டசேவா புரஸ்காா், ரயில் சேவா புரஸ்காா் ஆகிய இரு விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் விழா நடைபெறவில்லை. அதனால், விருதுகளும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், நிகழ் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஐசிஎஃப் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஐசிஎஃப் பொது மேலாளா் யு.சுப்பாராவ் தலைமை வகித்து 103 பணியாளா்களுக்கு இரு பிரிவுகளில் விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஐசிஎஃப் முதன்மைத் தனி அதிகாரி ஆா்.மோகன்ராஜா, முதன்மைத் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி என்.சீதாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
