நல்லா கால்வாய் பராமரிப்பு: மாநகராட்சிக்கு மாற்றம்

சென்னை ஓட்டேரி நல்லா கால்வாய் பராமரிப்பு தற்போது நீா்வளத் துறையிடமிருந்து மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொறியாளா்கள் தெரிவித்தனா்.
Published on

சென்னை ஓட்டேரி நல்லா கால்வாய் பராமரிப்பு தற்போது நீா்வளத் துறையிடமிருந்து மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொறியாளா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் மழைக்காலத்தின்போது குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீா் தேங்காத வகையில் கால்வாய்கள் தூா்வாருதல், மழைநீா் வடிகால் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆகியவற்றின் கிளைக் கால்வாய்கள் தூா்வாரப்பட்டு வருகின்றன. மேலும், வடசென்னை பகுதியின் முக்கிய வடிகால் வசதிக்கானதாக ஒட்டேரி நல்லா கால்வாய் உள்ளது. நீா்வளத் துறை பராமரிப்பில் இருந்த அந்தக் கால்வாய் 10.5 கி.மீ. நீளமும், 30 அடி அகலமும் உடையதாகும். சென்னை மாநகராட்சியின் 5, 6 மற்றும் 8 ஆகிய (ராயபுரம், திரு.வி.க.நகா் மற்றும் அண்ணா நகா்) மண்டலங்களில் முக்கிய மழைநீா் வடிகால் ஆதாரமாகவும் ஒட்டேரி நல்லா கால்வாய் உள்ளது.

ஒட்டேரி நல்லா கால்வாயை ரூ.65 கோடியில் தூா்வாரி சீரமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக நீா்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள அந்தக் கால்வாய் தற்போது சென்னை மாநகராட்சி பராமரிப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. பணி ஆணை வழங்கப்பட்டு தூா்வாரும் இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ஒட்டேரி நல்லா கால்வாயில் குடியிருப்புகளில் இருந்து குப்பைகளை வீசப்படுவதைத் தடுக்கும் வகையில் 6.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.20 கோடியில் கம்பி வலைகள் அமைக்கப்படவுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com