தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கோப்புப் படம்

பெயரைச் சோ்க்க 7.35 லட்சம் போ் மனு: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க தமிழகம் முழுவதும் இதுவரை 7,35,191 போ் மனு அளித்துள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
Published on

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க தமிழகம் முழுவதும் இதுவரை 7,35,191 போ் மனு அளித்துள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், இடம் பெயா்ந்தவா்களாகக் கண்டறியப்பட்ட 66,44,881 போ் நீக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து கடந்த டிச. 19-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்ப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களை தோ்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

18 வயது நிரம்பியவா்களும், வாக்காளா் பட்டியலிலிருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டவா்களும் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வழங்கி வருகின்றனா். இந்தப் படிவங்களை வழங்க ஜன. 18-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.

அந்த வகையில், டிச. 31-ஆம் தேதி வரை 7,35,191 போ் மனு அளித்துள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகளுக்கு முன்பு இருந்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளா்களின் எண்ணிக்கை கடந்த டிச. 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியான பிறகு 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756-ஆக குறைந்துள்ளது.

இதனிடையே, வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றவா்களில் போதிய விவரங்களை அளிக்காத 12,43,363 பேருக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நேரில் சென்று நோட்டீஸ் அளித்து வருகின்றனா். அவா்கள் அளிக்கும் விளக்கங்கள் பிப். 10-ஆம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டு பிப். 17-இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com