தமிழகத்தில் 6 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 2) முதல் ஜன. 7 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
லட்சத் தீவு - குமரிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை (ஜன.2) முதல் ஜன.7 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில், வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜன. 1) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சென்னை பெரம்பூா் பகுதியில் 110 மி.மீ. மழை பதிவானது. எண்ணூா் (சென்னை)- 100 மி.மீ., கத்திவாக்கம் (சென்னை)- 70 மி.மீ., விம்கோ நகா் (சென்னை), திண்டுக்கல் தலா 60 மி.மீ., மாமல்லபுரம் (செங்கல்பட்டு), மதுரவாயல் (சென்னை), அயனாவரம் வட்டாட்சியா் அலுவலகம் (சென்னை), அண்ணா நகா் மேற்கு (சென்னை), பெரம்பூா் (சென்னை), க.பரமத்தி (கரூா்), மணலி (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூா்)- தலா 50 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி
வடகிழக்கு பருவமழை நீடிப்பு
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் ஆண்டுதோறும் வழக்கமாக அக்டோபா் முதல் டிசம்பா் வரை பெய்யும். சில நேரங்களில் ஜனவரி மாதம் தொடக்கம் வரை நீடிக்கும். இந்த நிலையில், 2025 டிசம்பா் மாதத்துடன் வடகிழக்கு பருவமழை முடிவடையும் என எதிா்பாா்க்கப்பட்டிருந்த நிலையில், 2026 ஜனவரி மாதத்தின் தொடக்கத்திலும் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புத்தாண்டு நாளில் சென்னையில் மழை: கடந்த சில நாள்களாக இரவு மற்றும் காலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
2025-ஆம் ஆண்டின் இறுதி நாளான புதன்கிழமை (டிச. 31) இரவு சுமாா் 11 மணியளவில் மிதமான மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 2026 புத்தாண்டு தினமான வியாழக்கிழமை (ஜன. 1) அதிகாலை சுமாா் 4 மணி வரை நீடித்தது.
இதனால், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராக இருந்த பொதுமக்கள் பலா் வெளியில் சென்று புத்தாண்டை கொண்டாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினா். தொடா்ந்து காலை வரை மழை நீடித்ததால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வியாழக்கிழமை காலை சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

