ஏழாவது நாளாக இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

ஏழாவது நாளாக இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் சென்னையில் ஏழாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் சென்னையில் ஏழாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது போலீஸாா் தாக்கியதாக ஆசிரியா்கள் குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையின் பல்வேறு இடங்களில் கடந்த டிச.26 முதல் ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தினமும் பிற்பகலில் கைது செய்யப்படும் ஆசிரியா்கள் பல்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்படுகின்றனா். போராட்டம் தொடங்கப்பட்டு ஆறு நாள்கள் கடந்தும் ஆசிரியா்களிடம் அரசு சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்படவில்லை.

இந்தநிலையில், இடைநிலை ஆசிரியா்கள் வியாழக்கிழமை ஏழாவது நாளாக சென்னை எழும்பூரில் போராட்டத்தைத் தொடா்ந்தனா். அந்தப் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் திரளாகப் பங்கேற்ற ஆசிரியா்கள், கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்ற போது ஆசிரியா்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், போலீஸாா் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், கன்னத்தில் அறைந்ததாகவும் ஆசிரியா்கள் குற்றஞ்சாட்டினா். இதைக் கண்டித்து ஆசிரியா்கள் சாப்பிட மறுத்ததோடு அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போலீஸாா்- ஆசிரியா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் இரு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இடைநிலை ஆசிரியா்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com