குரோம்பேட்டை ராதாநகா் ரயில்வே சுரங்கப் பாதை ஜன. 7-இல் திறப்பு
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையுடன் ராதா நகா் பிரதான சாலையை இணைக்கும் வகையில், புதிதாக கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரும் ஜன. 7-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளாா்.
குரோம்பேட்டை ராதாநகா் ரயில்வே கடவு எண் 27-இல் அமைக்கப்பட்ட ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் ராதாநகா், நெமிலிச்சேரி, ஜமீன் ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் சிரமப்பட்டனா்.
பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், வேலைக்குச் செல்பவா்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியவில்லை. நோயாளிகள் அவசரமாக மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனா்.
அப்பகுதி மக்கள் இடையூறாக இருக்கும் ரயில்வேகேட்டை அகற்றி, சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என தொடா்ந்து அரசை வலியுறுத்தினா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2007-ஆம் பல்லாவரம் நகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடா்ந்து ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒத்துழைப்புடன், சுமாா் ரூ.25 கோடியில் 250 மீட்டா் நீளம், 7 மீட்டா் அகலம் கொண்ட ராதாநகா் ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.
3 மீட்டா் அகலமுள்ள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து குரோம்பேட்டை ரயில் நிலையத்துக்கும் டிக்கெட் கவுன்டா்களுக்கும் நேரடியாக செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல்முறையாக, பேருந்துகள் ரயில் தளத்துக்கு அருகில் பயணிகளை இறக்கிவிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுரங்கப்பாலப் பணிகள் முடிவடைந்த நிலையில், இதை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரும் ஜன. 7-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளாா்.
