கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜன. 5-இல் பள்ளிகள் திறப்பு: கல்வித் துறை அறிவுறுத்தல்

அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு வரும் திங்கள்கிழமை (ஜன. 5) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
Published on

அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு வரும் திங்கள்கிழமை (ஜன. 5) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகையான பள்ளிகளிலும் அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தோ்வுகள் கடந்த டிசம்பா் 10 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடா்ந்து டிசம்பா் 24-ஆம் தேதி தொடங்கிய மாணவா்களுக்கான அரையாண்டு விடுமுறை ஜனவரி 4-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த தொடா் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 5-இல் திறக்கப்படவுள்ளன.

இதையொட்டி, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன் விவரம்: பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளின்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆய்வகங்களில் உள்ள காலாவதியான பொருள்கள் பள்ளிகளின் இருப்பு பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். உயா் தொழில்நுட்ப ஆயவகங்கள், திறன் வகுப்பறைகள், இணையதள வசதிகள் ஆகியவை சரியான முறையில் இயங்க வேண்டும்.

இதுதவிர குடிநீா் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பான குடிநீா் மாணவா்களுக்கு வழங்கப்பட வேண்டும். காலை உணவு, சத்துணவுக் கூடங்கள், பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். பழுதான கட்டடங்கள் மற்றும் வகுப்பறைகள் பூட்டப்பட்டு இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விலையில்லா புத்தகம், நோட்டுகள் மற்றும் நலத் திட்டங்கள் பாதுகாப்பாகவும், குழந்தைகளுக்கு வழங்க தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில் அவை வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com