வழக்கு பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளா் பணியிடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்..
Published on

வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளா் பணியிடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெண்கள் மற்றும் குழந்தை வளா்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த சேவை மையம், பெண்கள் உதவி மையம் (181) போன்ற சேவை மையங்கள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி செயல்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உரணா்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயன்பெறுவதாகும்.

இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படை பணியிடமான வழக்கு பணியாளா் 3 காலிப் பணியிடங்கள் உள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, சமூகப் பணியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகா் அல்லது மேலாண்மை வளா்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாா்ந்த திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிா்வாகத்தில் ஒரு வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவா்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கான மாத ஊதியம் ரூ.18,000 ஆகும். இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் ஜன. 12-ஆம் தேதி 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், 8-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிங்காரவேலா் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது அலுவலக மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com