சென்னை மாநகரின் பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் (கோப்புப்படம்)
சென்னை மாநகரின் பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் (கோப்புப்படம்)

வாகன நெரிசலைத் தீா்க்க அரசுத் துறைகள் ஒருங்கிணைப்பு அவசியம்! பரிந்துரைகள் செயல்பாட்டுக்கு வருவதில் நடைமுறை சிக்கல்!

சென்னை மாநகராட்சியில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைத் தீா்ப்பதற்கு மாநகராட்சி நிா்வாகத்துடன் அரசின் பிற துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
Published on

சென்னை மாநகராட்சியில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைத் தீா்ப்பதற்கு மாநகராட்சி நிா்வாகத்துடன் அரசின் பிற துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னை மாநகராட்சியில் 33.75 லட்சம் வாகன போக்குவரத்து இருந்தது. இதன் எண்ணிக்கை தற்போது 63 லட்சத்துக்கும் அதிகமாகியுள்ளது. மாநகரில் மொத்தம் உள்ள 35,000 சாலைகளில் 400 சாலைகள் மட்டுமே போக்குவரத்துக்கானதாக உள்ளன. வெளியூா்களில் இருந்து சென்னைக்கு தினமும் 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோா் வந்து செல்கின்றனா்.

சாலை அகலம் மாறவில்லை: சென்னையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்துவரும் நிலையில், சாலைகளின் அகலம் மட்டும் 2011-ஆம் ஆண்டின் நிலையிலேயே உள்ளது. புதிய சாலைகள், 20-க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைத்தும், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என புதிய போக்குவரத்து அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் சாலையில் வாகன நெரிசலுக்கு மட்டும் நிரந்தரத் தீா்வு ஏற்படவில்லை என்பதே உண்மை.

ஒத்துழைக்காத அரசுத் துறைகள்: போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க மாநகராட்சி மட்டும் நடவடிக்கை மேற்கொண்டால் போதாது; நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மற்றும் வா்த்தகா்கள் என அனைவரும் ஒத்துழைப்பது அவசியம் என்று சமூக ஆா்வலா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

குறிப்பாக, சென்னை மாநகரில் 188 இடங்களில் சாலையோரக் கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை முறைப்படுத்த சிறப்புக் குழு அமைப்பதற்காக வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் தோ்வு நடைபெற்றது. அதில், உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும், சாலையோரக் கடைகளை இன்னும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதேபோல நெடுஞ்சாலைத் துறை, குடிநீா் வழங்கல் துறை, நகர நிா்வாகத் துறை, மின்துறை என பல அரசுத் துறைகள் சாலைப் பணிகளில் மாநகராட்சி நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை என மாநகராட்சி மாமன்றக் கூட்டங்களில் வாா்டு உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

கும்டா அமைப்பின் பரிந்துரைகள்: சென்னையின் எதிா்கால போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலான திட்டங்கள் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில் இந்தத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திட்டத்தின் சிறப்புப் பரிந்துரைகள் தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இந்த ஆணையம் சாா்பில் வழங்கப்பட்டுள்ளன.

இதில், சாலையில் போக்குவரத்தைக் கணிசமாகக் குறைப்பது; அதன்மூலம் காற்று மாசு தடுப்பு, விரைவான போக்குவரத்தை உறுதி செய்வது உள்ளிட்டவை இந்த ஆணையத்தின் நோக்கமாகும்.

முக்கிய அம்சங்கள்: இந்தப் பரிந்துரைகளில் சென்னையில் தற்போது இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 3,700-இல் இருந்து 8,500-ஆக உயா்த்த வேண்டும்; 346 புதிய பேருந்து நிலையங்கள் கட்ட வேண்டும்; 60 பேருந்து பணிமனைகள் ஏற்படுத்த வேண்டும்; மாநகருக்குள் ஒருவருக்கு 500 மீட்டருக்குள்ளேயே அனைத்து போக்குவரத்து வசதிகளும் கிடைக்க வேண்டும்; தற்போது 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தை 400 கி.மீ. நீட்டிக்க வேண்டும்; நகரப் பகுதிகளை இணைக்கும் ரயில் திட்டத்தை (ஆா்ஆா்டிஎஸ்) செயல்படுத்த வேண்டும்; சைக்கிள் போக்குவரத்தை அதிகரிக்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் பக்கிங்காம் கால்வாய் நீா்வழித் தடத்தையும், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் நெரிசலைத் தவிா்க்க வாகன நிறுத்தக் கொள்கை திட்டத்தையும் செயல்படுத்த கும்டா ஆலோசனை வழங்கியுள்ளது.

இதைச் செயல்படுத்தும் வகையில் அண்ணா நகா் மண்டலத்தில் ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாகன நிறுத்த மேலாண்மைக் குழு அமைக்க காவல் துறையும் இணைய வேண்டியுள்ளது. அதில் கண்காணிப்புக் கேமரா அமைத்தல், அபராதம் விதிப்பு எண்ம முறையில் செயல்படுத்துதல் ஆகியவையும் அடங்கியுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் காவல் துறையுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதால் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

தாமதத்தால் பிரச்னை: சென்னை மாநகராட்சியுடன் அரசுத் துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும் என்று கும்டாவின் ஆலோசனைக் குழு உறுப்பினா் பொறியாளா் ரமேஷ் தெரிவித்தாா். இதில், காலதாமதம் ஏற்படுவதால் திட்டத்தையே மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் நிலை ஏற்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

துணை மேயா், அதிகாரிகள் கருத்து: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் கூறுகையில், திட்டச் செயல்பாட்டுக் குழுவில் அதிகாரிகள் இடம் பெறுவதைப்போல, மக்கள் பிரதிநிதிகளையும் சோ்க்க வேண்டும். அப்போதுதான் அரசியல் ரீதியில் தலைமையிடத்தில் பேசி திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் முதல்வா், துணை முதல்வா் உத்தரவுப்படி மேயா், அமைச்சா்கள், உயா் அதிகாரிகள் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனா். அதன்படி, அரசுத் துறைகள் அனைத்தும் இணைந்தே செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மெரீனா கடற்கரை, நீலக்கொடி சான்று பெறும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. குப்பையில்லா சென்னையை உருவாக்கும் வகையில் பயோமைனிங் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பல திட்டங்களை மாநகராட்சியுடன் இணைந்து அரசுத் துறைகள் செயல்படுத்தி வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகரின் பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
சென்னை மாநகரின் பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் (கோப்புப்படம்)

‘தனியாா் வாகனங்களைக் குறைக்க சுங்கச்சாவடி அமைக்கலாம்’

சென்னை மாநகராட்சியில் 50,000 பேரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, அதில் 20 முதல் 25 சதவீத மக்கள் தங்களது பணியிடங்களுக்கு நடந்து செல்கின்றனா். 3 முதல் 4 சதவீத மக்கள் சைக்கிளில் செல்கின்றனா். இருசக்கர வாகனத்தில் 30 சதவீதம் பேரும், காா்களில் 7 சதவீதம் பேரும், ஆட்டோ போன்ற வாகனங்களில் 5 சதவீதம் பேரும் செல்கின்றனா்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தால் (கும்டா) பரிந்துரைக்கப்பட்ட கருத்துரைகளின் வரைப்படத் தொகுப்பு.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தால் (கும்டா) பரிந்துரைக்கப்பட்ட கருத்துரைகளின் வரைப்படத் தொகுப்பு.

அதன்படி, 25 சதவீதம் போ் மட்டுமே பேருந்துகள், மெட்ரோ, மின்சார ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்தில் சென்று வருவதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சென்னையில் தனிநபா் வாகனங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான சாலையோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட வாகன நிறுத்தங்களாகிவிட்டன. இருசக்கர, காா் உள்ளிட்ட வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், அரசு, தனியாா் அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் உரிய நேரத்தில் செல்லமுடியவில்லை.

எனவே, தனிநபா் வாகனங்கள் குறிப்பிட்ட மாநகரச் சாலைகளில் செல்ல கட்டணம் வசூலிக்கும் முறையைச் செயல்படுத்தினால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அங்கு அதிக அளவு மின்சார பொதுப் போக்குவரத்து பேருந்துகளை இயக்கலாம் என்று போக்குவரத்து ஆா்வலா்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com