ரூ. 800 கோடியில் பல்நோக்கு போக்குவரத்து வசதி வளாகம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் ரூ.800 கோடியில் குறளகத்துடன் இணைந்த பல்நோக்கு போக்குவரத்து வசதி வளாக பெருந்திட்டம் பிராட்வே பகுதியில் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான தொடக்க விழா வரும் ஜன.25-ஆம் தேதி நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
கொளத்தூா், துறைமுகம், வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பிராட்வே பேருந்து நிலைய மறு சீரமைப்புப் பணியைத் தொடா்ந்து தீவுத்திடலில் ரூ.7.77 கோடியில் அமைக்கப்படும் தற்காலிகப் பேருந்து நிலையத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிராட்வே பேருந்து நிலையம் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதைச் சீரமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில், குறளகத்துடன் இணைந்த பல்நோக்கு போக்குவரத்து வசதியுடன் 73 பேருந்துகள் நிறுத்தும் வசதிகளுடன் பயணிகள் தேவைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள.
இதையடுத்து ரூ.7.77 கோடியில் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையம் 55 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்படுகிறது. அதற்கு துணை பேருந்து நிலையமாக தீவுத்திடலிலும் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. அங்கும் பெரிய பேருந்து நிலையம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிராட்வே பேருந்து நிலையம் குறளகத்துடன் இணைந்த பல்நோக்கு போக்குவரத்து வசதி வளாகப் பெருந்திட்டம் அமைக்க மொத்தம் ரூ.800 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. பெருந்திட்டத்துக்கு சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் ரூ.160 கோடியும், மாநகராட்சி ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. பல்வேறு துறைகளில் கிடைக்கும் நிதி ஆதாரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ரூ.800 கோடியில் பல்நோக்கு போக்குவரத்து வசதி பெருந்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வரும் ஜன.25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறாா் என்றாா் அவா்.
ஆய்வின்போது, சென்னை மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் அ.வெற்றி அழகன், பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலரும், அரசு முதன்மைச் செயலருமான ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

