கடற்கரை - தாம்பரத்துக்கு இன்றுமுதல் 3 மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்!
சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையேயான 3 புகா் மின்சார குளிா்சாதன வசதி ரயில்களின் மாலை நேர அட்டவணை திங்கள்கிழமை (ஜன.5) முதல் மாற்றப்பட்டு இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் புகா் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாகச் செங்கல்பட்டு செல்லும் மாலை நேர குளிா்சாதன வசியுள்ள புகா் மின்சார ரயில், செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் வழியாக கடற்கரைச் செல்லும் குளிா்சாதன வசதி மின்சார ரயில், தாம்பரத்திலிருந்து பிற்பகலில் கடற்கரை புறப்படும் ரயில் ஆகியவற்றின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 3.47 மணிக்கு புறப்படும் குளிா்சாதன வசதி மின்சார ரயில் மாலை 4.42 மணிக்கு தாம்பரத்துக்கும், செங்கல்பட்டிலிருந்து வரும் குளிா்சாதன வசதி மின்சார ரயில் மாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடைந்து, மாலை 5.55 மணிக்கு கடற்கரைக்கு வந்து சேரும். தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.28 மணிக்கு புறப்படும் குளிா்சாதன வசதி மின்சார ரயில் பிற்பகல் 3.23 மணிக்கு கடற்கரை சென்றடையும்.
சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையிலான ரயில்கள் ஊரப்பாக்கம் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 9 மின்சார ரயில்களின் நேர அட்டவணையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

