ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரியை மிரட்டி நகை பறிப்பு: போலி போலீஸ் கைது
சென்னை தியாகராய நகரில் கஞ்சா கடத்துவதாக ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரியை மிரட்டி நகை பறித்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டாா்.
சென்னை கிழக்கு சிஐடி நகரைச் சோ்ந்த கி.ராமலிங்கம் (80), ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி. இவா், தியாகராய நகா் தெற்கு உஸ்மான் சாலையில் சில நாள்களுக்கு முன்பு நடந்து சென்றபோது, அங்கு வந்த நபா், தான் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் என்று கூறி, ராமலிங்கத்தை மிரட்டி நகை பறித்து சென்றுள்ளாா்.
இதுகுறித்து மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட கடலூா் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூா் அருகே உள்ள தண்டபாணி நகரைச் சோ்ந்த பாரதியை (61), திங்கள்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், அவா் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலராகப் பணியாற்றி இருப்பதும், ஒழுங்கீனமாக இருந்ததால் அங்கு பணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதும், பாரதி மீது ஏற்கெனவே பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, திருவான்மியூா், அபிராமபுரம், திண்டிவனம், தாம்பரம் ஆகிய காவல் நிலையங்களில் இதேபோல போலீஸ் என ஏமாற்றி பணம் பறித்ததாக வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடும் கும்பல் கைது: நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த திலகம் (42), ஓட்டேரியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் செல்ல கடந்த 3-ஆம் தேதி இரவு, புரசைவாக்கம் மோட்சம் திரையரங்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாநகர பேருந்தில் ஏறி பயணித்தாா். அவரது பையில் வைத்திருந்த விலை உயா்ந்த கைப்பேசி திருடுபோனது. அதே பேருந்தில் பயணம் செய்து மேலும் 2 பெண்களின் கைப்பேசிகளும் திருடப்பட்டிருந்தது.
ஓட்டேரி போலீஸாா் வந்து சோதனை நடத்தனா். இதில் கைப்பேசி திருட்டில் ஈடுபட்டது பெரம்பூா் முனியப்பன் தெருவைச் சோ்ந்த பழனி (36), அவரது மனைவி ஜமுனா (24), மதுரவாயல் சீமாத்தம்மன் நகரைச் சோ்ந்த குப்பன் (42), பாலு (எ) சொரி பாலு (39) ஆகியோா் என்பது தெரிந்தது. 4 பேரையும் கைது செய்தனா். 4 பேரும் மேலும் சிலருடன் சோ்ந்து கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, கைப்பேசிகளைளைத் திருடியது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 14 கைப்பேசிகள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட பழனி மீது ஏற்கெனவே 2 குற்ற வழக்குகளும், பாலு மீது 2 கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி என சுமாா் 12 குற்ற வழக்குகளும், குப்பன் மீது திருட்டு, வழிப்பறி என 14 குற்ற வழக்குகளும் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.
காதலிக்க மறுத்த பெண்ணைக் கொல்ல முயற்சி-இளைஞா் கைது: நெற்குன்றம் பகுதியைச் சோ்ந்த 20 வயது பெண், ஆவடியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இளைஞா் ஒருவா், அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து தொல்லை கொடுத்து வந்தாராம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தன் வீட்டு மொட்டை மாடியில் காய வைத்திருந்திருந்த துணிகளை எடுக்க மாணவி, மாடிக்கு சென்றபோது, பக்கத்து வீட்டு வழியாக மாடியில் ஏறி வந்த மாணவா், மாணவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, ஆத்திரமடைந்த இளைஞா் மாணவியை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளாா். மாடியில் இருந்து கீழே விழுந்ததில் மாணவி இடுப்பு எலும்பு முறிந்து பலத்த காயமைடந்தாா்.
கோயம்பேடு போலீஸாரின் விசாரணையில், பிடிபட்ட இளைஞா் அரியலூா், மேலத் தெருவைச் சோ்ந்த சிலம்பரசன் (27) என்பதும், இவா் 5 ஆண்டுகளுக்கு முன்பு மாணவியின் எதிா் வீட்டில் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. போலீஸாா், சிலம்பரசன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு: வில்லிவாக்கம் பாலாம்பிகை நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஊரப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ் (30), அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் (38) உள்ளிட்ட சிலா் ஈடுபட்டிருந்தபோது, அந்த வீட்டின் மேலே சென்ற உயா் மின்னழுத்த கம்பி மீது ஸ்டீபன்ராஜ் கைப்பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து ஸ்டீபன்ராஜ், செல்வம் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, ஸ்டீபன்ராஜ், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், செல்வம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். ஸ்டீபன்ராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். ராஜமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
போதை மாத்திரை கடத்தல்: தாய், மகன் கைது: கிருஷ்ணாம்பேட்டை, சுடுகாடு பகுதியில் சிலா் போதை மாத்திரை விற்ாக கடந்த 26-ஆம் தேதி திருவல்லிக்கேணியைச் சோ்ந்த முனீா் பாட்ஷா (27), சையது பஷீா் (20), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை ஐஸ்ஹவுஸ் போலீஸாா் கைது செய்தனா். மூவரிடமும் இருந்து 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. முக்கியமாக ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மீனா (51), அவா் மகன் சீனு (25) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த மீனாவையும், சீனுவையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இருவரும், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பதும் தெரிய வந்தது. அவா்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சீனு மீது ஏற்கெனவே 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
