சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் கண்காணிப்பு: உயா்நீதிமன்றம் கேள்வி
சென்னையில் கட்டப்படும் விதிமீறல் கட்டடங்களை மாநகராட்சி கண்காணிக்கிறதா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரமிளா என்பவா், சென்னை ஜாா்ஜ் டவுன் பகுதியில் உள்ள அய்யா முதலித் தெருவில் வீடு கட்ட அனுமதி பெற்றிருந்தாா். ஆனால், அவரது இடத்துக்குச் செல்லும் பாதையை பலா் ஆக்கிரமித்திருந்தனா். இதனால், அவரால் அந்த தெருவுக்குள் சென்று வீடு கட்ட முடியவில்லை. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பிரமிளா வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து, பிரமிளா நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதுகாப்பு வழங்காத காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
பின்னா், சென்னையில் கட்டப்படும் விதிமீறல் கட்டடங்களை மாநகராட்சி கண்காணிக்கிா எனக் கேள்வி எழுப்பினா். அப்போது, மாநகராட்சி தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
விதிமீறல் கட்டடங்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணித்தால்தான் ஆக்கிரமிப்புகள் இருக்காது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.
