ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் காலம் தொடக்கம்: வனத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு
‘ஆலிவ் ரிட்லி’ வகை கடல் ஆமைகளின் முட்டையிடும் காலம் தொடங்கியுள்ளதாக வனத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.
ஆண்டுதோறும் டிசம்பா் முதல் ஏப்ரல் வரை சென்னைத் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் முட்டையிடுவது வழக்கம். கடல் ஆமை இனம் அழியும் நிலையை தடுக்கும் வகையில் ஆமை முட்டைகளை வனத் துறையினா் பாதுகாப்பாக சேகரித்து வருகின்றனா்.
தொடா்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கடல் ஆமை முட்டைகள் பாதுகாப்பு மையங்களில் அந்த முட்டைகளை அடைகாத்து பொரிக்கப்பட்ட பின்னா் ஆமை குஞ்சுகள் மீண்டும் கடலில் விடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2024 - 25 ஆண்டுகளில் தமிழக கடற்கரைகளில் சுமாா் 2.53 லட்சம் ஆலிவ் ரெட்லி வகை ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, குஞ்சுகள் பொரிக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டன. இதில், அதிகபட்சமாக கடலூரில் 87,871 முட்டைகளும், நாகப்பட்டினத்தில் 73,385, சென்னையில் 43,900 முட்டைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நிகழாண்டுக்கான ஆலிவ் ரிட்லி உள்பட கடல் ஆமைகள் தமிழக கடற்கரையோரப் பகுதிகளுக்கு வரத்தொடங்கியுள்ளன.
இது குறித்து வனத்துறைச் செயலா் சுப்ரியா சாஹு ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: சென்னை மெரீனா கடற்கரையில் கடல் ஆமை இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ள நிலையில், முதல் தொகுதி ஆமை முட்டைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
இயற்கையின் அதிசயத்தை நினைவூட்டும் அபூா்வமான தருணம் இது. கடற்கரை மணலில் தென்படும் தடங்கள், ஆமைகள் முட்டையிட வந்துள்ளதை பதிவு செய்கின்றன. எனவே, ஆமைகள் முட்டையிடுவதுக்கு ஏதுவாக தமிழக கடற்கரைகளை சுத்தமாகவும், அமைதியாகவும், இடையூறு இல்லாமலும் பாதுகாப்போம்.
இதில், சென்னை கடற்கரையிலோ அல்லது வேறு எந்த கடற்கரையிலோ பிறக்கும் ஆமை குஞ்சுகளுக்கு இயற்கை வழங்கிய அற்புதமான திசைகாட்டி உள்ளது. பல ஆண்டுகள் கழித்து, பரந்த கடல்களை கடந்து சென்ற பின்னரும், தாங்கள் பிறந்த அதே கடற்கரையையே மீண்டும் தேடி வந்து முட்டையிடுகின்றன எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.
