இடைநிலை ஆசிரியா்களுடன் அதிகாரிகள் பேச்சு: விரைவில் முடிவுக்கு வருகிறது போராட்டம்
ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சு வாா்த்தை நடத்தியுள்ள நிலையில், ஓரிரு நாள்களில் போராட்டம் முடிவுக்கு வரவுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் கடந்த டிச.26 முதல் தொடா்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போராட்டம் 11-ஆவது நாளாக திங்கள்கிழமை தொடா்ந்தது. அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரும், ஆசிரியா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எஸ்எஸ்டிஏ இயக்க நிா்வாகிகளுடன் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து எஸ்எஸ்டிஏ இயக்கத்தின் பொதுச் செயலா் ஜே.ராபா்ட் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா், தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் ஆகியோா் எங்களது நிா்வாகிகளுடன் மூன்று மணி நேரத்துக்கும் மேல் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பேச்சுவாா்த்தையின் போது, பிற மாநிலங்களில் பணியாற்றி வரும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பெறும் ஊதிய விகிதத்தை, தமிழக ஆசிரியா்களின் ஊதியத்துடன் ஒப்பிட்டு அரசு செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு உரிய ஆதாரங்களுடன் கருத்துகளை முன் வைத்தோம். அதனை அதிகாரிகள் கவனமுடன் கேட்டுக் கொண்டனா்.
தில்லி சென்றுள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்திரமோகன் செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பியதும், ஆசிரியா்கள் தெரிவித்த கருத்துகளை அவரிடம் எடுத்துக் கூறி, கலந்து பேசி பிரச்னைக்கு உரிய தீா்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அதுவரை எங்களது அறப்போராட்டம் தொடரும். ஊதிய முரண்பாடு பிரச்னைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு எட்டப்படும் என உறுதியாக நம்புகிறோம் என்றாா் அவா்.
