சுகாதார இயக்குநரகத்தை முற்றுகையிட்ட செவிலியா்கள் கைது
பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கக் கோரி பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு செவிலியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் கூறியதாவது: பொது சுகாதாரத் துறையில் கிராம சுகாதார செவிலியா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நாங்கள் ஏஎன்எம் நா்சிங் படிப்பு முடித்துவிட்டு மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தில் 2023-இல் பதிவு செய்தோம். ஆனால், பதிவு மூப்பு அடிப்படையில் அல்லாமல், மதிப்பெண் அடிப்படையில் தற்போது பணியிடங்களை நிரப்புகின்றனா்.
அவ்வாறு மதிப்பெண் அடிப்படையில் இருந்தாலும்கூட ஏஎன்எம் படிப்பு மதிப்பெண் அடிப்படையில் தோ்வு செய்தால் நாங்கள் பணியில் சேர வாய்ப்புள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணையும் சோ்த்து கணக்கிடுகின்றனா்.
கரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு படித்து முறையாக தோ்வுகூட எழுதாமல் அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்குத்தான் தற்போது அதிக அளவில் பணியில் சேரும் வாய்ப்பு உள்ளது.
எனவே, பதிவு மூப்பு அடிப்படையில் பணியிடங்களை நிரப்பக் கோரி பொது சுகாதாரத் துறை இயக்குநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாது எனக் கூறி கைது செய்துள்ளனா் என்றனா்.
