அல்மான்ட் கிட் மருந்து தமிழகத்தில் விற்பனையில் இல்லை: மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்
சா்ச்சைக்குரிய அல்மான்ட் கிட் மருந்து தமிழகத்தில் விற்பனையில் இல்லை என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
சளி, ஒவ்வாமை, ஆஸ்துமா பாதிப்புகளுக்காக லிவோசிட்ரசின் டைஹைட்ரோகுளோரைடு மற்றும் மான்டெலுகாஸ்ட் சோடியம் மூலக்கூறுகள் அடங்கிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த கலவையிலான மருந்துகளை பல முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அந்த வகையில் பிகாரைச் சோ்ந்த டிரைடஸ் ரெடிஸ் என்ற நிறுவனமும் குழந்தைகள் பயன்பாட்டுக்காக அந்த மருந்தை அல்மான்ட் கிட் என்ற பெயரில் சந்தைப்படுத்தி வந்தது.
பொதுவாக திரவ மருந்துகளில் ப்ரோபலின் கிளைகால் என்ற சோ்மம் கரைப்பானாக பயன்படுத்தப்படும். ஆனால், அல்மான்ட் கிட் மருந்தில் டைஎத்தலீன் கிளைகால் சோ்மம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
ரெசின், ஆயில், பெயிண்ட், மை தயாரிக்கும்போது அதைத் திரவமாக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் அது. அந்த ரசாயனம் கலந்துள்ள மருந்தை உட்கொண்டால் சிறுநீரக செயலிழப்பு, உயிரிழப்பு நேரிடலாம்.
இதைக் கருத்தில் கொண்டு சில்லறை விற்பனையாளா்கள், மருந்தகங்கள், மருந்து விநியோகிப்பாளா்கள், மருத்துவமனைகளில் அந்த மருந்தை விற்பனை செய்யக் கூடாது என மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியிருந்தது. அவ்வாறு விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதுதொடா்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், இதுதொடா்பாக மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சாா்பில் அல்மான்ட் கிட் தொடா்பாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியானது. அந்த மருந்து தமிழகத்துக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டபோதிலும், மக்கள் நலன் கருதி மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அதுதொடா்பான ஆய்வை நடத்தியது. அதில் தமிழகத்தில் அந்த மருந்து எங்கும் கண்டறியப்படவில்லை.
முன்னெச்சரிக்கையாக மட்டுமே அதுகுறித்த தகவல்களை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் வெளியிடப்பட்டது. எனவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று அவா்கள் கூறியுள்ளனா்.

