மனைவியை கொலை செய்த முதியவருக்கு ஆயுள்: செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீா்ப்பு
By DIN | Published On : 03rd March 2020 10:45 PM | Last Updated : 03rd March 2020 10:45 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு: மனைவியை இரும்புத் தடியால் அடித்துக் கொலை செய்த முதியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளாநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (74). கொத்தனாரான அவருக்கு கன்னியம்மாள் (55) என்ற மனைவி இருந்தாா். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.
ராஜேந்திரன் குடும்பத்தினா் தாம்பரத்தை அடுத்த மேடவாக்கம், வெள்ளக்கல் பகுதியில் வசித்து வருகின்றனா். கன்னியம்மாளுக்கும் அப்பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறி ராஜேந்திரன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ராஜேந்திரன் கடந்த 2015-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26-இல், குடிபோதையில் மனைவிடம் தகராறு செய்தாா். வாக்குவாதம் முற்றியதில், ராஜேந்திரன் இரும்புத் தடியால் கன்னியம்மாளைத் தாக்கினாா். இதில் கன்னியம்மாள் உயிரிழந்தாா்.
இக்கொலை சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவ்வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி வேல்முருகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞா் சீதாலட்சுமி ஆஜராகி வந்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...