செங்கல்பட்டு: குட்டையில் மூழ்கி 3 பேர் பலி

செங்கல்பட்டை அடுத்த காந்தலூர் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் உள்பட மூன்று பேர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த காந்தலூர் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் உள்பட மூன்று பேர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு அடுத்த காந்தலூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. தற்போது இயங்காமல் உள்ளதால் அங்கு பெரிய ராட்சத பள்ளம் உள்ளது.

கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையின் காரணமாக 1500 அடிக்கும் மேல் உள்ள பள்ளத்தில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. 

இந்த கல்குவாரி குட்டை மிகப்பெரிய பரப்பளவில் இருப்பதாலும், தேங்கியிருக்கூடிய நீர் பளிச்சென்று இருப்பதாலும் திடீர் சுற்றுலாத் தலமானது. பல்வேறு இடங்களிலிருந்து பலரும் இங்கு வந்து குளித்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தமீம் அன்சாரி (25) என்பவர் அவரது மாமன் மகள் சமீதா (17), ஏஞ்சல் (17) மற்றும் இரு பெண்களுடன் வந்து காந்தலூர் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். 

குளிக்கச் சென்றவர்களுக்கு நீச்சல் தெரியாததால் தமீம் அன்சாரி, சபீதா, ஏஞ்சல் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் வந்த இரண்டு பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து அவர்களை சடலமாக மீட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த தமீன் அன்சாரி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் வந்து குளித்து சென்றதைத் தொடர்ந்து இன்றும் குளிக்க வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த கல்குவாரியில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாததால் குளிக்க வரும் பலர் உயிரிழந்து வருவது தொடர் கதையாக உள்ளது. 

எனவே பாதுகாப்பு இல்லாததால் யாரையும் குளிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் இந்த பகுதியை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com