மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் வளாகத்தில் பழமையான மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: பக்தர்கள் அதிர்ச்சி

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக 10க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்
வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக 10க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீதலசயனப் பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் 63-வது ஸ்தலமாகும். இக்கோயிலில் தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயில் சுவர் அமைப்பதற்கு தடையாக இருந்த சிறிய மரங்கள் சில அகற்றப்பட்டன. 

ஆனால் கோயில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு சம்பந்தமே இல்லாத நன்கு வளர்ந்துள்ள பெரிய மரங்களான வேப்பமரம், புங்கமரம், அரசமரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த மரங்கள் கோயில் வளாகத்தில் வெட்டி அகற்றப்பட்டன.

கோயில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கும், இந்த மரங்கள் உள்ள இடங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், இவை எதன் அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளன எனவும் பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் கோடை காலத்தில் இந்த மரத்தடி நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு செல்வது வழக்கம்.

கோயிலுக்கு பக்தர்கள் கொண்டு வரும் வாகனங்களும் இந்த மரத்தடி நிழலில் நிறுத்தப்படுவது வழக்கம். தற்போது கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலர் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு சம்பந்தமே இல்லாத கோயில் முகப்பு வளாக பகுதியில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோயில் நிர்வாகத்தின் மெத்தன போக்கால் இந்த பழமை வாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மரங்களை அகற்றாமல் இந்த சுற்றுச்சுவர் பணிகளை தொடங்கியிருக்கலாம் என்றும் கூறி இதற்கு காரணமான கோயில் செயல் அலுவலர், மேலாளர் பணியாளர்கள் மீதும், மரத்தை அகற்றிய ஒப்பந்த பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி வனத்துறை மற்றும் அறநிலையத்துறை, பசுமை தீர்ப்பாய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். 

பழமை வாய்ந்த மரங்கள் அகற்றப்பட்ட சம்பவத்தால் உள்ளூர் மக்கள் எதிர்ப்பால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் தற்போது உள்ள மரங்களுக்கு இடையே கூடுதலாக மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற காரணத்தால் கடந்த 2019-ம் ஆண்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகையின் நினைவாக வைக்கப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படாத காரணத்தால் வீணாகிவிட்டன.

இருக்கின்ற பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி வீசப்பட்டும், இரண்டு நாட்டு தலைவர்கள் நினைவாக நடப்பட்ட மரங்களும் பராமரிப்பின்றி செத்து வீணாகி போனதையும் கண்டு பொதுமக்களும், பக்தர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இது தொடர்பாக பக்தர்கள், பேருந்து நிலைய வியாபாரிகள் தனித்தனியாக அறிலையத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி உள்ளனர். மேலும் கோயில் செயல் அலுவலர் கோயிலுக்கே வருவதில்லை, மடப்பள்ளி பணிக்கு எடுக்கப்பட்ட மேலாளர்  தன்னிச்சையாக செயல்படுகிறார் என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த செயலுக்கு இந்துசமய அறநிலையத்துறை, வனத்துறை, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com