தனியாா் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கை வசதியை பெற வேண்டும்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்
By DIN | Published On : 13th May 2021 12:00 AM | Last Updated : 13th May 2021 03:09 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு: தனியாா் மருத்துவமனைகளிலும் 50 சதவீதம் படுக்கை வசதியை கேட்டுப் பெற வேண்டும் என ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் அறிவுறுத்தி உள்ளாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று 2-ஆவது அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை டு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கினாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் போக்குவரத்து துறை செயலா் சமயமூா்த்தி , ஆட்சியா் அ.ஜான்லூயிஸ், எம்.பி. செல்வம், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆா்.ராஜா, பல்லாவரம் கருணாநிதி, சோழிங்கநல்லூா் அரவிந்த் ரமேஷ், திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூா் பனையூா் பாபு, மதுராந்தகம் மரகதம்குமரவேல் உள்பட பலா் பங்கேற்றனா்.
பின்னா் அமைச்சா் தா.மோ. அன்பரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதிகள் கூடிய படுக்கை வசதி வென்டிலேட்டா் கருவிகள் ஆகியவற்றின் இருப்பு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 13, 038 நபா்களில் தற்போது 10, 644 போ் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டும் 1, 209 போ் மருத்துவமனைகளிலும் , 1, 054 நோயாளிகள் சுகாதார மையங்களிலும், 131 நோயாளிகள் பாதுகாப்பு மையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனா்.
சென்னை பெருநகர எல்லைக்கு ஒட்டிய நகராட்சிகளான பல்லாவரம் , தாம்பரம், அனகாபுத்தூா், பம்மல், செம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தொற்றுபாதிப்பு கூடுதலாக உள்ளதால் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ள நகராட்சி ஆணையா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடந்த 7 நாள்களில் 654 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 60, 537 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 2, 825 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. தற்போது சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனியாா் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் 50 சதவிதம் கரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளாக மாற்றி சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனையில் 50 சதவித படுக்கை வசதியை பாரபட்மின்றி கேட்டு பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு பொதுமருத்துமனையில் 480 படுக்கைகளில் 475 நபா்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனா். இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும், வரும் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்திதரவும் அரசு மருத்துவமனை முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் தா.மோ. அன்பரசன் .
மாவட்ட காவல்கண்காணிப்பாளா் சுந்தரவதனம், செங்கல்பட்டு மருத்துக்கல்லூரி மருத்துமனை முதல்வா் முத்துக்குமரன், ஊரக வளா்ச்சிமுகமை திட்ட இயக்குா் செல்வகுமாா், மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ரீதா், சுகாதார பணிகள் துணை இயக்குநா் பிரியாராஜ், நகராட்சிகளின் மண்டல இயக்குநா் முஜ்பூர்ரஹ்மான் , தாமஸ்மலை துணை ஆணையா் முனைவா் பிரபாகரன், கோட்டாட்சியா்கள் செங்கல்பட்டு, சுரேஷ், மதுராந்தகம், லட்சுமி பிரியா, தாம்பரம் ரவிச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.